நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு
நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி, மாணவரிடம் 3 வாலிபர்கள் நகைகளை பறித்துக்கொண்டு காதலன் கண் முன்னே காதலியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பு நடைபெற்றது. இதற்காக சாயல்குடி போலீசாரின் தரப்பில் ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டது. இதனை ஏற்று முதன்மை குற்றவியல் நீதிபதி இதற்கென பரமக்குடி நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து பரமக்குடி நீதிபதி முன்னிலையில் நேற்று மதுரை மத்திய சிறையில் 3 வாலிபர்களுடன் மேலும் சிலரை நிற்கவைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மாணவர் ஆகிய இருவரும் நீதிபதி முன்னிலையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சரியாக அடையாளம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்களை நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கில் விரைவில் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.