ராசிபுரம் அருகே கண்ணூர்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ராசிபுரம் அருகே கண்ணூர்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள கண்ணூர் பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 15 தினங்களுக்கு முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கடந்த திங்கட்கிழமை இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலை சுற்றி வந்தனர். மாலையில் அலகு குத்துதல், பூங்கரகம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. காளியம்மன் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலையில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில் ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, புதுச்சத்திரம், சேலம், ஆத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து அம்மனை தரிசித்தனர்.