டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கடை முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-07 17:58 GMT
புதுக்கோட்டை:
டாஸ்மாக் கடை
புதுக்கோட்டை மேல ராஜ வீதி டவுன் ஹாலில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தின் வழியாக தான் வடக்கு 2, 3, 4-ம் வீதி மற்றும் மாப்பிள்ளையார்குளம் பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த வழியாகத் தான் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் வழியாகும். 
அந்த வழியாக செல்லும் குடியிருப்பு வாசிகள், பெண்கள் மற்றும் மருத்துவமனை செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த கடையை அகற்றக்கோரி பல முறை அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் சில காரணங்களால் இந்த கடை மூடப்படடது.
போராட்டம்
இந்நிலையில், மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடை முன்பு அமர்ந்து கடையை திறக்க கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் ஜபார், டாஸ்மாக் துணை மேலாளர் வரதராஜன், புதுக்கோட்டை தாசில்தார் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்