கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

Update: 2022-04-07 17:53 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
விண்ணப்பிக்கலாம்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நபர்களது குடும்பத்தினர் கொரோனா நோய்த்தொற்றினால் இறந்ததற்கான இறப்புசான்று வைத்திருப்பின் www.tn.gov.in இணையவழியாகவும், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறி முறைகளின்படி விண்ணப்பிக்கலாம்.
20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள், அதாவது 18.5.2022 தேதிக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.7 கோடி நிவாரணம்
மேற்குறிப்பிட்டு உள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள், அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரீசிலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே, கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,401 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கடந்த 7.12.2022 முதல் 15.3.2022 வரை ரூ.7 கோடியே 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்