சித்திரை திருவிழா கொடியேற்றம்
சின்னமனூர் சிவகாமி அம்மன்-பூலாநந்தீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சின்னமனூர்:
சின்னமனூரில் சிவகாமி அம்மன், உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிக்கம்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தினந்தோறும் அனைத்து சமுதாயத்தினரின் மண்டகப்படி மற்றும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் 14-ந்தேதி திருக்கல்யாணம், 16 மற்றும் 17-ந் தேதிகளில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நதியா, தக்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் சின்னமனூர் நகராட்சி தலைவர் அய்யம்மாள் ராமு, காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன் சாமி, நகராட்சி துணை தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.