விலைவாசி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் பேரணி

விலைவாசி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று பேரணி நடத்தினர்.

Update: 2022-04-07 17:43 GMT
கோப்பு படம்
மும்பை, 
விலைவாசி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணி நடத்தினர். 
காங்கிரஸ் பேரணி
நாடுமுழுவதும் பெட்ரோல் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. 
இந்தநிலையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் மும்பை பவன்ஸ் கல்லூரியில் இருந்து ஆகஸ்ட் கிராந்தி மைதானம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே இந்த பேரணிக்கு தலைமை தாங்கினார். மேலும் மந்திரிகள் பாலாசாகேப் தோரட், நிதின் ராவத், கட்சியின் மூத்த தலைவர்கள் நசீம் கான், சந்திரகாந்த் அண்டோர் மற்றும் பலர் பேரணியில் கலந்துகொண்டனர். 
பேரணியில் நானா படோலே பேசியதாவது:-
 சாமானியர்கள் பாதிப்பு
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி மத்திய அரசு மக்களை தொடர்ந்து சூறையாடுகிறது. மத்தியில் ஆளும் மோடி தலைமைலான அரசு கொடூரமான மனநிலையுடன் செயல்படுகிறது. அதன் அட்டூழியங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. 
பெட்ரோல், டீசல், கியாஸ், சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை சாமானிய மக்களின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது.
விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் மக்களை கொள்ளையடிக்கும் பா.ஜனதா அரசை மக்கள் விரட்டுவார்கள். விலைவாசி உயர்வு தொடர்பான இந்த போராட்டம் மோடி அரசுக்கான எச்சரிக்கை மணி. 
இவ்வாறு அவர் கூறினார். 
காணாமல் போன தலைவர்கள்
இதேபோல் மந்திரி பாலாசாகேப் தோரட் பேசுகையில், “ 2014-ம் ஆண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது விலைவாசி உயர்வுக்காக வீதியில் இறங்கி போராடிய பா.ஜனதா தலைவர்கள் தற்போது காணாமல் போய்விட்டனர். எந்த பா.ஜனதா தலைவரும் விலைவாசி உயர்வு பற்றி பேசவில்லை” என்றார். 
பேரணியல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்