கறம்பக்குடி அருகே ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்க கோரிக்கை
கறம்பக்குடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கறம்பக்குடி:
அங்கன்வாடி மைய கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியில் புதுப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது.
இந்த மையத்திற்கு இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி போடுவது, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பெருட்கள் வழங்குவது போன்ற பணிகள் இந்த மையத்தில் நடைபெறுகிறது.
கதவுகள் உடைந்து கிடக்கிறது
இந்நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம், கதவுகள், மேற்கூரை, சாய்தளம் போன்றவை மிகவும் பமுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கதவுகள் உடைந்து கிடப்பதால் இந்த மைய கட்டிடத்தில் நாய்கள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
மின் இணைப்பு துண்டிக்கபட்டு உள்ளதால் வயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்குகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள் வசதிக்காக போடப்பட்ட சாய்தளம் பெயர்ந்து கிடப்பதால் அங்கன்வாடி மையத்திற்குள் செல்லவே பெரும் சிரமப்பட வேண்டி உள்ளது.
கோரிக்கை
இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே பெற்றோர்கள் தயங்குகின்றனர். கட்டிடம் பழுதாகி இருப்பதால் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தபடாமல் உள்ளது.
எனவே குழந்தைகளின் நலன்கருதி புதுப்பட்டி அங்கன்வாடி மையத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.