ரூ.1 கோடி செலுத்தினால் ராமேசுவரம் மீனவர்களுக்கு ஜாமீன்
மீனவர்கள் 12 பேரும் தலா ரூ.1 கோடி செலுத்தினால் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரும் தலா ரூ.1 கோடி செலுத்தினால் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ. 1 கோடி
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரும் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, மீனவர்கள் 12 பேரும் ஜாமீனில் செல்ல விருப்பப்பட்டால் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் எனவும், பணம் கட்ட தவறினால் வருகின்ற மே 12-ந் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்தும் உத்தரவிட்டார்.
இதேபோல் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த 4 மீனவர்களுக்கும் வருகின்ற 21-ந் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். .
அதிர்ச்சி
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரையும் ஜாமீனில் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் ரூ. 1 கோடி கேட்டு உத்தரவிட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் கூறும்போது, குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும், வயிற்று பிழைப்புக்காகவும் தான் மீனவர்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்க செல்கின்றனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் ஒரு படகின் மதிப்பு ரூ.35 லட்சம் தான் இருக்கும். அப்படி இருக்கையில் மீனவர் ஒரு கோடி கட்டினால் மட்டுமே ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு இதுவரை இல்லாத பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.
நடவடிக்கை
கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையிலும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பல கோடி பணம் கேட்கும் சம்பவம் மிகுந்த மனவேதனை ஆகவே உள்ளது.
ஆகவே மீனவர்கள் விஷயத்தில் இனியும் மத்திய, மாநில அரசுகள் அமைதி காக்காமல் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி படகுடன் மீனவர்களை விடுதலை செய்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.