கோவையில் காகித விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவையில் காகித விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை
கோவையில் காகித விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
காகித விலை உயர்வு மற்றும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி கோவை அச்சகங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று காலை கோவை தெற்கு தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கோயமுத்தூர் மாஸ்டர்ஸ் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் சி.டி.குமாரவேல், கோயம்புத்தூர் அச்சகதாரர்கள் சங்க தலைவர் மனோகரன், பொள்ளாச்சி அச்சகதாரர்கள் நலச்சங்க தலைவர் பரிமளம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து அச்சகங்கள் பழைய நிலைக்கு அடியெடுத்து செல்லும் நிலையில் காகித விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக அதிகரிப்பு
இதன்படி சாதாரண காகிதம் டன்னுக்கு ரூ.7 ஆயிரம் வரையும், ஆர்ட் பேப்பர், ஆர்ட் போர்டு விலை டன்னுக்கு ரூ.50 ஆயிரம் வரையும் உயர்ந்து உள்ளது. மேலும் காகித பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது.
மேலும் பெரும்பாலான அச்சுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 முதல் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காகிதம் மட்டும் அல்லாமல் பிலிம், பிளேட், கெமிக்கல் விலையும் அதிகரித்து உள்ளது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.