2 முறை குளியல்... நீர்ச்சத்து உணவுகள்... பேரூர் கல்யாணி யானை உற்சாகம்

கோவையில் சுட்டெரிக்கும் வெயிலால் 2 முறை குளியல், நீர்ச்சத்து உணவுகள் என பேரூர் கல்யாணி யானை உற்சாகமாக உள்ளது.

Update: 2022-04-07 17:29 GMT
பேரூர்

முக்தி தலம் என்று அழைக்கப்படும் பேரூரில் புகழ்பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். 

இந்த கோவிலில் 30 வயதுள்ள கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகனாக ரவி என்பவர் உள்ளார். அவர் தினமும் அந்த யானையை பராமரித்து வருகிறார்.

 பேரூர் கல்யாணி யானையை தினமும் ஒருமுறை மட்டுமே குளிக்க வைப்பது வழக்கம். தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது.

 இந்த உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க கல்யாணி யானை தினமும் காலை மற்றும் மாலை என 2 வேளையும் குளியல் போட்டு வருகிறது.இதற்காக கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள குளியல் மேடையில் தினமும் இந்த யானை குளித்து மகிழ்கிறது. 

2 மணி நேரம் வரை தண்ணீரில் குளித்து மகிழும் கல்யாணி யானை, தண்ணீரில் படுத்து உருண்டு வெப்பத்தை தணித்துக்கொள்கிறது. அத்துடன் துதிக்கையால் தண்ணீரை உடல் முழுவதும் தெளித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. 

ேமலும் கோடைகாலம் என்பதால் இந்த யானையின் உணவு முறையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக கேரட், தர்ப்பூசணி, முலாம்பழங்கள் வழங்கப்படுவதால் அதை நன்றாக சாப்பிடும் கல்யாணி யானை, தினமும் 2 வேளை குளிப்பதால் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுகிறது. 

மேலும் செய்திகள்