குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு
குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு செய்யப்பட்டது.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.சாலை பல மாதங்களாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளால் சாலை அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார் எழுந்தது. மேலும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளர் பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி பொறியாளர் குமரவேல் மற்றும் அவர்களுடன் கவுன்சிலர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பாதாள சாக்கடை திட்டத்தின்போது உடைந்த குழாய்களை சீர்செய்தல், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்தல், சாலை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், அம்ரூத் திட்டத்தில் 2-வது மண்டலத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் 64 இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியாக அவை சரிசெய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும். ஆர்.டி.ஓ. சாலையில் குழாய் சரிசெய்யப்பட்ட பின்னர் அங்கு சாலை அமைக்கப்பட உள்ளது என்றனர்.