தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதால் வாலிபர் எரித்து கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது
தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதால் வாலிபரை எரித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டு உள்ள பயங்கர சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது
பெங்களூரு: தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதால் வாலிபரை எரித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டு உள்ள பயங்கர சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்திரா (வயது 53). இவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் தனது குடும்பத்தினரிடம் வசித்தார். சுரேந்திராவின் மகன் அர்பித் (25). சுரேந்திரா கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்தார். இந்த நிலையில் சுரேந்திரா தான் செய்து வந்த தொழிலை அர்பித்திடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் செய்து வரும் தொழிலை கவனித்து கொள்ளும்படி சுரேந்திரா, அர்பித்திடம் கூறியுள்ளார். அப்போது அர்பித் நான் சி.ஏ. படிக்க விரும்புகிறேன். இதனால் தொழிலை கவனித்து கொள்ள முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அர்பித்தை வலுக்கட்டாயமாக கட்டிடங்களை வடிவமைக்கும் தொழிலில் சுரேந்திரா ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் முன்பு சண்டை
இந்த நிலையில் அர்பித் தொழிலை முன்நின்று கவனித்து கொள்ள, அவரை பின்னால் இருந்து சுரேந்திரா இயக்கி வந்து உள்ளார். ஆனாலும் தொழிலில் அர்பித் நஷ்டம் ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் தொழில் மூலம் கிடைத்த ரூ.1½ கோடி பணத்தை சுரேந்திராவிடம், அர்பித் கொடுக்காமல் இருந்து வந்து உள்ளார். இதுதொடர்பாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாகவும் சுரேந்திரா, அர்பித் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஆசாத் நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான குடோனுக்கு சுரேந்திராவும், அர்பித்தும் சென்று உள்ளனர். அங்கு வைத்து ரூ.1½ கோடி பணத்தை தரும்படி சுரேந்திரா, அர்பித்திடம் கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் குடோனில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் முன்பு சண்டை போட்டதாக தெரிகிறது.
அவர்களை தொழிலாளர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்து உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் பணத்தை தர முடியாது. என்னை கொலை வேண்டும் என்றால் செய்து கொள் என்று சுரேந்திராவை பார்த்து அர்பித் சவால் விடும் வகையில் கூறியதாக சொல்லப்படுகிறது.
தின்னர் ஊற்றி தீ வைப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்திரா குடோனில் இருந்த பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் தின்னரை எடுத்து அர்பித் மீது ஊற்றி உள்ளார். பின்னர் குடோனில் இருந்து வெளியே வந்ததும் அர்பித் மீது சுரேந்திரா தீயை கொழுத்தி போட்டு உள்ளார். இதில் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அர்பித் அங்கும், இங்கும் ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அர்பித் உடலில் பிடித்த தீயை அணைத்தனர்.
பலத்த தீக்காயம் அடைந்த அர்பித்தை, சுரேந்திரா அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அர்பித் இறந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் சாம்ராஜ்பேட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அர்பித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடியோ வைரல்
போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதாலும், ரூ.1½ கோடி தராததாலும் ஆத்திரத்தில் அர்பித்தை, சுரேந்திராவை தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திராவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெற்ற மகனை, தந்தையே எரித்து கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அர்பித் மீது சுரேந்திரா தின்னர் ஊற்றி தீ வைத்த காட்சிகளும், அர்பித் உடலில் தீப்பிடித்து எரிந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
தந்தை என் மீது தீ வைப்பார் என நினைத்து பார்க்கவில்லை
தொழிலில் நஷ்டம், ரூ.1½ கோடி கொடுக்காததால் அர்பித் மீது அவரது தந்தை சுரேந்திரா தீ வைத்தார். அர்பித்தை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற போது, எனது தந்தை என் மீது தீ வைப்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
அவர் இப்படி செய்ததை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஆஸ்பத்திரியில் தன்னை பார்க்க வந்தவர்களிடமும் அர்பித் தந்தை என் மீது தீ வைப்பார் என்று நினைத்து பார்க்கவில்லை என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அர்பித் இறந்தது கஷ்டமாக உள்ளது
அர்பித்தின் குடோன் அருகே வசித்து வரும் பிரேம்குமார் என்பவர் கூறும்போது, சம்பவம் நடந்த அன்று மதியம் 2 மணி. மதியம் தெருவில் யாரும் இல்லை. குடோனில் அர்பித்தும், சுரேந்திராவும் சண்டை போட்டு கொண்ட சத்தம் கேட்டது. அப்பா-மகன் பிரச்சினை என்பதால் நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
அர்பித் மிகவும் அமைதியான நபர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அவர் இறந்தது கஷ்டமாக உள்ளது என்றார்.
அர்பித் ஒரு அப்பாவி
தந்தை சுரேந்திராவால் எரித்து கொலை செய்யப்பட்ட அர்பித் பற்றி மூர்த்தி என்பவர் கூறும்போது, அர்பித் மிகவும் அமைதியான நபர். அவர் குடோனுக்கு வந்து, போவது பற்றி யாருக்கும் தெரியாது. அவர் குடோனுக்கு அவரது தந்தை சுரேந்திராவுடன் தான் வருவார்.
அவருடன் தான் செல்வார். அர்பித் ஒரு அப்பாவி. தந்தை-மகனுக்குள் என்ன சண்டை என்று தெரியவில்லை என்றார்.
மனஅழுத்தத்தில் இருந்த சுரேந்திரா
தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதால் அர்பித் என்ற வாலிபரை அவரது தந்தை சுரேந்திரா தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கட்டிடங்களை வடிவமைக்கும் தொழிலை சுரேந்திரா மிக சிறப்பான முறையில் செய்து பலரது நம்பிக்கையை பெற்று உள்ளார்.
ஆனால் அர்பித் தொழிலில் நிறைய நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் சுரேந்திரா மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.