`கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது' போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேச்சு

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்

Update: 2022-04-07 16:55 GMT
தூத்துக்குடி:
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது, என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்டிக்கடை மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை 100 சதவீதம் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. 
கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை தடுப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளிகளின் அருகில் சட்டவிரோதமாக குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையை 100 சதவீதம் தடை செய்ய வேண்டும், மீறினால் சட்டப்படி அந்த கடைக்கு `சீல்' வைக்கப்படுவதுடன் குற்றவியல் வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி வியாபாரிகள் சங்க தலைவர் சோலையப்ப ராஜா, செயலாளர் மகேஸ்வரன், தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கர், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்துப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்