விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழுப்புரம்,
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.15 மணியளவில் கொடி மரத்திற்கு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் உற்சவம்
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கு உற்சவமும், இரவு சூரிய பிரபை, அதிகாரநந்தி சேவை, நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் திருத்தேரோட்டம் நடைபெறும். மறுநாள் 16-ந் தேதி காலை ஸ்ரீநடராஜர் உற்சவம் தீர்த்தவாரியும், இரவு அவரோஹணம் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடக்கிறது. 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், ஆய்வாளர் செல்வராஜ், அர்ச்சகர் வைத்தியநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், பிரதோஷ பேரவையினர் செய்து வருகின்றனர்.