அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் கைது
தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள மகளுக்கு கொடுத்தது அம்பலமானது
சிக்கமகளூரு: தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள மகளுக்கு கொடுத்தது அம்பலமானது.
ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்
விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா ஹூண்டினகெரே கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் சபியுல்லா. இவரது மனைவி உமேசல்மா கடந்த மாதம் மார்ச் 15-ந் தேதி தாவணகெரேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது டாக்டர்கள், உமேசல்மாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது உமேசல்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து குழந்தை, தாய் உமேசல்மாவின் படுக்கை அருகே தொட்டிலில் வைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை மர்மநபர்கள் திருடி கடத்தி சென்றுவிட்டனர். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தாவணகெரே டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை வலைவீசி தேடிவந்தனர்.
குழந்தை மீட்பு
நேற்றுமுன்தினம் காலை தாவணகெரே டவுனில் பெண் ஒருவர், ஆண் ஒருவரிடம் குழந்ைதயை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த நபர், தாவணகெரே டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் கடத்தப்பட்ட குழந்தை உமேசல்மா என்பவரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தை, உமேசல்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெண் கைது
இந்த நிலையில் நேற்று குழந்தையை திருடியதாக ஆஜாத் நகரை சேர்ந்த குல்ஜார்பானு என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூருவில் உள்ள அவரது மூத்த மகள் பர்ஹானுக்கு வெகு நாட்களாக குழந்தை இல்லை என்பதும் இதனால் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து உமேசலானுக்கு பிறந்த குழந்தையை திருடி சென்று மகளிடம் வளர்க்க கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
கைதான குல்ஜார் பானு மீது குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.