தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல் :
மாற்றுப்பாதையில் பஸ் வசதி
திண்டுக்கல் ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சியில் குமாரபாளையம், அரசனம்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வழக்கமான பாதையில் பஸ்கள் வருவதில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குள்ளனம்பட்டி, பொன்னகரம், வாழைக்காய்பட்டி, சிறுமலைப்பிரிவு, ரெட்டியபட்டி, ரெங்கசமுத்திரபட்டி வழியாக மாற்று பாதையில் பஸ் இயக்க வேண்டும். -சீனிவாசன், அழகர்நாயக்கன்பட்டி.
தொற்றுநோய் பரவும் அபாயம்
திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி 9-வது வார்டு பிஸ்மிநகரில் சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் வால்வு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் குடிநீரில் வால்வு வழியாக கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அமிர்பாட்சா, பிஸ்மிநகர்.
சேதம் அடைந்த சாலை
திண்டுக்கல் அருகே உள்ள வீரசின்னம்பட்டியில் இருந்து மருநூத்து செல்லும் சாலை சேதம் அடைந்துவிட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -குமார், சாணார்பட்டி.
பஸ்நிலையத்தில் குப்பைகள்
தேனி புதிய பஸ் நிலையத்தில் கோவை, திருப்பூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் பாலித்தீன் கழிவுகள், குப்பைகள் கிடக்கின்றன. இவை பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, பஸ்நிலையத்தில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். -சிவாஜி, சின்னமனூர்.