கஞ்சா வேட்டையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 148 பேர் கைது- போலீஸ் சூப்பிரண்டு
கஞ்சா வேட்டையில் மாவட்டத்தில் இதுவரை 148 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
கஞ்சா வேட்டை
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. டாக்டர் வருண்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 தொடங்கி கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை கடந்த மாதம் 28-ந்தேதி முதல் தொடங்கப்பட்டு தீவிர கண்காணிப்பும், தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் கூடுதலாக 15 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மாவட்டத்தில் மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 93 ஆயிரத்து 300 மதிப்பிலான 138.93 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், குட்கா பொருட்கள் விற்பனை செய்தோர் மீது மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 670 மதிப்பிலான 86.29 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சன்மானம்
எனவே மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து 6379904848 என்ற செல்போனுக்கு தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் அடையாளம் ரகசியம் காக்கப்படும். மேலும் 10 கிலோ, அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றினால் ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும். இது போலீசாருக்கும் பொருந்தும். கல்லூரி வளாகம், பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி நிலையங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர்களுடன் தேனீர் அருந்த அழைப்பு விடுத்து உரிய மரியாதையுடன் தேனீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். இதில் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் ரகசியமாகவும் வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.