வால்பாறை மலைவாழ் கிராமங்களில் மக்களை தேடி மருத்துவ முகாம்

வால்பாறை மலைவாழ் கிராமங்களில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-04-07 13:30 GMT
வால்பாறை

வால்பாறை மலைவாழ் கிராமங்களில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.

மலைவாழ் கிராமங்களில் முகாம்

வால்பாறை வட்டார பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ திட்டமாக விளங்கும் மக்களைதேடி மருத்துவம் திட்டம் மூலம் வால்பாறை பகுதியில் உள்ள மலைவாழ் கிராம மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றது. அதன்படி மருத்துவ பணியாளர்கள், வனத்துறையினரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் தலைமையில் ஆனைமுடி, நல்லமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சங்கரன்குடி, பரமன்கடவு ஆகிய 2 மலைவாழ் கிராம மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளுக்கே சென்று மக்களைதேடி மருத்துவ திட்டத்தின் மருத்துவ பணியாளர்கள் ஒவ்வொரு மலைவாழ் மக்களின் வீடுகளுக்கே சென்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

பிசியோதெரபி சிகிச்சை 

குறிப்பாக சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டது. கை, கால் மற்றும் முழங்கால் வலியுள்ளவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை வீடுகளிலேயே அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களையும் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை, சுகாதாரமாக உடல் பராமரிப்பு, காய்ச்சி கொதிக்க வைத்த குடிதண்ணீரை பயன்படுத்துவது, கர்ப்பிணிகள் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரவேண்டும். எந்த வகையான உடலநிலை பாதிப்புகள் ஏற்பட்டாலும் சுகாதார நிலையங்களுக்கு வந்து சிகிச்சை பெறவேண்டும் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்