மருத்துவத்துறை பணியாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை பணியாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2022-04-07 18:45 GMT
திருவாரூர்:-

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை பணியாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். 

உண்ணாவிரதம்

கொரோனா நோய் தொற்று காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 
நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

2 செவிலியர்கள் மயக்கம்

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வினோஷா, மாவட்ட பொருளாளர் ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சந்திரசேகர ஆசாத், அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராஜா, அருள்மணி, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் சண்முகம், ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 2 செவிலியர்கள் மயக்கம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

போராட்டம் நீடிப்பு

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் மீண்டும் வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். நேற்று காலையில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. இதில் கலந்து கொண்ட குடவாசல் பகுதியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என்றும், பணி நீக்க ஆணையால் திருவாரூர் மாவட்டத்தில் 37 செவிலியர்களும், 40 தொழில்நுட்பனர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

பேச்சுவார்த்தை

இதனிடையே மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் சுகாதார அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிற மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என மருத்துவத்துறை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

மேலும் செய்திகள்