சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதை பவுடர் பறிமுதல்

ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பவுடர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது.

Update: 2022-04-07 12:02 GMT
அதிகாரிகளுக்கு தகவல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக பிரிவில் இருந்து ஐக்கிய அமீரக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு பெட்டிகளில் பெரும் அளவு போதை பவுடர் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் சரக்கக பிரிவுக்கு விரைந்து சென்று, தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயிக்கு சட்டைகள் ஏற்றுமதி செய்வதற்காக 750 கிலோ எடை கொண்ட 25 பெட்டிகள் வந்திருந்தன. இந்த பெட்டிகள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு பெட்டியில் சட்டைகளுக்கு நடுவே வைக்கப்படும் அட்டைகள் கணமாக இருந்தன.

போதை பவுடர் சிக்கியது

அவற்றை பிரித்து பார்த்த போது ‘சூடோபீட்ரின்’ போதை பவுடர் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில், 1,200 சட்டைகளில் 515 சட்டைகளில் இருந்து போதை பவுடர்களை கைப்பற்றினார்கள். ஆக மொத்தம் ரூ.9 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள 49 கிலோ 200 கிராம் ‘சூடோபீட்ரின்’ போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், விசாரணையில் இறங்கினர். மேலும் இது தொடர்பாக ஏற்றுமதி செய்த 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், போதை பவுடர் கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து ஐக்கிய அமீரக நாடுகளுக்கு ரூ.10 கோடி போதை பவுடர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்