வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

Update: 2022-04-07 11:11 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டிக்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு குடிபுகும் போராட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து  கொள்வதற்காக கேத்தம்பட்டி ஊர் பொதுமக்கள் இன்று காலை வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை நுழைவு வாயிலேயே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனையடுத்து அங்கு நடந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், நாகராஜ், சண்முகம், கிளை செயலாளர் லோகநாதன் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கேத்தம்பட்டிக்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதை போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது உள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மணிமொழி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஊர் பொதுமக்கள் வழக்கம்போல் சென்று வந்த சாலையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இதை யாராவது தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சமரசம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்