பா.ஜனதா கட்சியினர் பேரணி
பா.ஜனதா கட்சி நிறுவன நாளையொட்டி நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினரின் பேரணி நடந்தது.
நாகர்கோவில்:
பா.ஜனதா கட்சி நிறுவன நாளையொட்டி நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினரின் பேரணி நடந்தது.
பேரணி
பா.ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
அதே போல குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பா.ஜனதா அலுவலகம் வரை பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பா.ஜனதா கட்சி அலுவலகம் வரை பேரணி செல்ல அனுமதி அளித்தனர். அதைத் தொடர்ந்து செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பா.ஜனதா கட்சியினரின் பேரணி நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு
இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநகர பார்வையாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அணியின் தேசிய செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாநில செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், அய்யப்பன், வீரசூர பெருமாள், சுனில்குமார், மண்டல தலைவர்கள் ராகவன், சிவபிரசாத், நாகராஜன், அஜித் குமார் மற்றும் மகளிரணி சத்யா உள்பட பலர் கலந்துகொண்டு பா.ஜனதா கொடியை கையில் ஏந்தியபடி பா.ஜனதா அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனர்.
அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை மாவட்ட தலைவர் தர்மராஜ் ஏற்றி வைத்தார்.
முன்னதாக பேரணி காரணமாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செட்டிகுளம் பகுதியில் போலீசாரின் அனுமதியின்றி பேரணியாக சென்று, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.