அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் ஊழியர்களின் நலன் சார்ந்த எந்தவிதமான கோரிக்கைகளையும் செயல்படுத்துவது இல்லை என்றும், தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று அதிகாலையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்சை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனால் அதிகாலையில் பணிமனையில் இருந்து புறப்பட வேண்டிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊழியர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்சை இயக்கினர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.