போலீஸ் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

போலீஸ் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

Update: 2022-04-06 20:27 GMT
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க வந்து செல்கின்றனர்.
ஆனால் பொதுமக்கள் அளிக்கும் பல புகார்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புகார் மீது விசாரணை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு, அலைக்கழிக்கப்படுவதால், மன உளைச்சலுக்கு உள்ளாவதாக சில புகார்தாரர்கள் கூறுகின்றனர்.
சில புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதபட்சத்தில் சிறிய பிரச்சினை, பெரிய அளவிலான பிரச்சினையாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. மேலும் ஒருசில போலீசார் புகார் கொடுக்க வருபவரிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
மேலும் புகார் மீதான தாமதம் குறித்து புகார் அளித்தவர்கள் கேட்கும்போது, இந்த போலீஸ் நிலையத்தில் முன்பு 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் மற்றும் 2 சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் போலீசாரின் எண்ணிக்கை யும் குறைவாகவே உள்ளது. இதனால் புகார்களின் மீதான விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது, என்று போலீசார் தெரிவிப்பதாக புகார்தாரர்கள் கூறுகின்றனர்.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, போதிய போலீசாரை நியமித்து பொதுமக்களின் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அளிக்க வருபவர்களை மரியாதையுடன் நடத்த போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்