கடப்பாரையால் அடித்து ஓட்டல் உரிமையாளர் கொலை

கபிஸ்தலம் அருகே ஓட்டல் சுவரில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட ஓட்டல் உரிமையாளர் கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-06 20:01 GMT
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே ஓட்டல் சுவரில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட ஓட்டல் உரிமையாளர் கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டார்.
ஓட்டல் உரிமையாளர்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 49). மாற்றுத்திறனாளியான இவர், அண்டக்குடி மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார். 
நேற்று மதியம் இவரது ஓட்டல் சுவாில் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்த தாராசுரத்தை சோ்ந்த அன்பழகன்(50) சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதை அசோக்குமார் தட்டிக்கேட்டார்.
கடப்பாரையால் அடித்துக்கொலை
இதனால் அசோக்குமாருக்கும், அன்பழகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அன்பழகன் அருகே கிடந்த கடப்பாரையை எடுத்து அசோக்குமாரின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. 
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
கைது
இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதாகிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்று ஓட்டல் உரிமையாளர் அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
கொலை செய்யப்பட்ட அசோக்குமாருக்கு லதா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். லதா வாழ்க்கை கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும் செய்திகள்