அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது
அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் இருந்து செம்பேடு நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் அரக்கோணம் போலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது 59) டிரைவராகவும், அரக்கோணம் வடமாம்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்த சுகுமார் (49) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர். காலை 8.30 மணி அளவில் சோகனூர் விநாயகர் கோவில் அருகே பஸ் வந்தபோது சாலையை மறித்த படி மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்ததை அங்கிருந்த இளைஞர்களிடம், கண்டக்டர் சுகுமார் பஸ்சிற்கு வழிவிட்டு ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்த சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டரை கையால் தாக்கியுள்ளனர். இது குறித்து கண்டக்டர் சுகுமார் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோகனூர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் வேலு (29) மற்றும் 18 வயது வாலிபர் ஒருவர் என 2 பேரை கைது செய்தனர்.