குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தோகைமலை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தோகைமலை,
குடிநீர் குழாய் சேதம்
தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி சுக்காம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கொசூர் ஊராட்சி சார்பாக ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பணியாளர் மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் குழாயை சீரமைக்க கோரியும், குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாளையம்-தோகைமலை மெயின் ரோட்டில் வீரப்பூர் பிரிவு சாலை அருகே நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ராஜலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதி மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.