சாத்தனூர் அணை திறக்கப்பட்டு 2 நாட்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை
வாய்க்கால் தூர்வாராததால் சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் 2 நாட்கள் ஆகியும் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் அணை உள்ளது. இந்த அணையின் மூலம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் பாசனத்துக்கு பிப்ரவரி மாதம் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்தாண்டு அணை பராமரிப்பு பணி காரணமாக காலதாமதமாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 4-ந்தேதி சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
வழக்கமாக அணை திறக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூங்கில்துறைப்பட்டுக்கு தண்ணீர் வரும். ஆனால் இந்தாண்டு நேற்று வரை தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 24 மணி நேரத்துக்குள் திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து மூங்கில்துறைப்பட்டுக்கு வந்துவிடும்.
48 ஏரிகள்
பின்னர் இங்கிருந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 48 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆனால் சாத்தனூர் அணையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூங்கில்துறைப்பட்டுக்கு வரும் வாய்க்காலை முன்னெச்சரிக்கையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 2 நாட்கள் ஆகியும் இது வரை தண்ணீர் வரவில்லை.
வாய்க்கால் தூர்வாரப்படாத காரணத்தால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இது தவிர ஏரிகளுக்கு செல்லும் கிளை வாய்க்கால்களையும் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு
இதன் மூலம் இந்தாண்டு விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஆங்காங்கே விவசாயிகள் ஒன்று சேர்ந்து கிளை வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாத்தனூர் அணை தண்ணீரை நம்பி நாங்கள் அதிக நிலப்பரப்பில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். எனவே எங்கள் பயிரை காப்பாற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.