கரூரில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 47 தொழிலாளர்கள் மீட்பு
கரூரில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 47 தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
கரூர்,
செங்கல் சூளை
கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதிக்குட்பட்ட எல்லைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பணிபுரிவதாக பல்வேறு புகார் வந்தது.
இதையடுத்து, கரூர் ஆர்.டி.ஓ. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 9 குடும்பங்களை சேர்ந்த 5 ஆண் குழந்தைகள், 14 பெண் குழந்தைகள் உள்பட 47 பேர் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
உரிமையாளர் மீது வழக்கு
இதையடுத்து, அவர்கள் அனைவரையும் மீட்டு கரூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட செங்கல்சூளை உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வின போது தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி, தொழிற்சாலைகள் துணை இயக்குனர் பூவிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி, மண்மங்கலம் தாசில்தார் ராதிகா ஆகியோர் உடன் இருந்தனர்.