பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூரில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-06 18:31 GMT
கடலூர், 

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

முதல்கட்ட போட்டி

அதனால் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் ஆகியோர் தங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி, அதில் மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க 25 மாணவர்களுக்கு மிகாமல் அனுப்பி வைக்க வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் பின்வரும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சலில் அனுப்பி வைக்கலாம். மேலும் tdadcuddalore@gmail.com என்ற இணையதள முகவரி மூலமாகவும் வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். பள்ளி மாணவர்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி காலை 11.30 மணிக்கும் நடைபெறும். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்