திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றத்தை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்றார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்றார். அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள நகராட்சி இடத்தில் குடிசை வீடு மற்றும் வீடுகள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை அளவீடு செய்ததில் சுமார் 11 ஆயிரம் சதுரடி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக்கொள்ள நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு எந்த பதிலும் இல்லை.
அதைத்தொடர்ந்து குடிசை வீடுகள் அகற்றப்பட்டது. வீட்டு வரி, குடிநீர் வரி ரத்து செய்யப்பட்டு, மின்சார இணைப்பை துண்டிக்கவும் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்த பொக்லைன் எந்திரத்துடன் நகராட்சி அதிகாரிகள் சென்றனர்.
பெண் தீக்குளிக்க முயற்சி
இதை பார்த்ததும் ஆண்டாள் (வயது 55) என்பவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகிலிருந்த போலீசார் மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
அதற்குள் அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரமேஷ், பா.ஜ.க. நகர தலைவர் அருள்மொழி. பொதுச்செயலாளர் ஈஸ்வர் உள்ளிட்டவர்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஜெயராம ராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது வீடு கட்டப்பட்டுள்ள இடத்திற்கு தங்களிடம் பட்டா இருந்தால் கொண்டு வாருங்கள் இல்லையென்றால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.