காங்கிரஸ் பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு
காங்கிரஸ் பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காரைக்குடி,
பள்ளத்தூர் உ.அ. வீதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 53). இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் மற்றும் ஒருங்கிணைந்த சாக்கோட்டை ஒன்றிய காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு தலைவராகவும் உள்ளார். மேலும் பள்ளத்தூரில் உள்ள கருமாரியம்மன் கோவில் நிறுவனர் மற்றும் டிரஸ்ட்டியும் ஆவார். இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் செல்லப்பன் அந்த இடத்தை சுத்தப்படுத்தி வேலி அமைத்தார். இந்த இடத்தை பாதையாக பயன்படுத்தி வந்த சிலர் செல்லப்பன் வேலி அமைக்க ஆட்சேபனை தெரிவித்தனர். அதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜோசப், கனகவள்ளி, பாண்டிச்செல்வி, சாத்தப்பன் ஆகிய 4 பேர் செல்லப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் அவர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.