வாணியம்பாடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 மூட்டை சாராயம் பறிமுதல்
வாணியம்பாடியில் தொடர்ந்து 2-வது நாளாக போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 மூட்டை சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் தொடர்ந்து 2-வது நாளாக போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 மூட்டை சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தாய்- மகன் கைது செய்யப்பட்டனர்.
13 மூட்டை சாராயம் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர், இந்திராநகர், காமராஜர் நகர் பகுதியில் சாராயம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதை தடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் நேதாஜி நகர், இந்திரா நகர் பகுதியில் வீடு, வீடாக சோதனை நடத்தினர்.
இரண்டாவது நாளான நேற்று சாராய வியாபாரி மகேஸ்வரியின் உறவினர் வீட்டில் இருந்து 13 மூட்டை சாராயமும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சாராய பதுக்கலில் ஈடுபட்டிருந்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தாய்- மகன் கைது
இந்த நிலையில் ஏற்கனவே தேடப்பட்டு வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரியின் அக்கா ஆம்பூரைச் சேர்ந்த விஜயா (வயது 50) மற்றும் அவரது மகன் அரவிந்த் (20) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.