மதுபோதையில் மயங்கி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர்
கடலூரில் மதுபோதையில் மயங்கி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நேற்று முன்தினம் இரவு, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்கள் 3 பேருடன் தள்ளாடியபடி நடந்து சென்றார். அப்போது அந்த இளம்பெண், திடீரென மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆண் நண்பர்கள் 3 பேரும், அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே இளம்பெண் மயங்கி கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அந்த இளம்பெண், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அழகுக்கலை நிபுணர்
விசாரணையில் அந்த இளம்பெண் நேபாளம் நாட்டை சேர்ந்தவர் என்பதும், கடலூரில் அழகுக்கலை நிபுணராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவா், நேற்று முன்தினம் மாலை தனது காதலர் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர் போதை தலைக்கேறியதும் அவர்களுடன் சன்னதி தெரு வழியாக தான் தங்கியுள்ள விடுதிக்கு நடந்து சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். இதை அறியாத அவரது காதலர் மற்றும் நண்பர்கள் இளம்பெண்ணை விட்டு போதையிலேயே விடுதிக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் பெற்றோரை வரவழைத்து, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மதுபோதையில் இளம்பெண் மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.