இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு; 20 பேர் காயம்

இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-04-06 17:46 GMT
அன்னவாசல்:
ஜல்லிக்கட்டு
இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 
மிரட்டிய காளைகள்
வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து வந்து நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன் பின்னர் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் என பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 765 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
20 பேர் காயம்
காளைகள் முட்டி தள்ளியதில் பாண்டியன் (வயது 35), அப்பு (23), பாலமுத்து (30), வடிவேல் (40), பொன்னன் (70), சுப்பிரமணியம் (43) உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த துரைச்சாமி (25), கிருஷ்ணன் (35) உள்ளிட்ட 5 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கம் மோட்டார் சைக்கிள், சைக்கிள், ஏர்கூலர், பிரிட்ஜ், வாசிங்மிசின், கட்டில், மின்விசிறி, டேபிள்பேன், குக்கர், ஹாட்பாக்ஸ், சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன
பாதுகாப்பு
இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையில் இலுப்பூர் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி உள்ளிட்ட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இருந்திரப்பட்டி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்