பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை ஒரே நாளில் கடந்து சென்ற 5 மிதவை கப்பல்கள்
பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை ஒரே நாளில் 5 மிதவை கப்பல்கள் கடந்து சென்றன.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக 5 மிதவை கப்பல்கள் தென் கடல் பகுதி மற்றும் வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் மிதவை கப்பல்கள் கடந்து செல்வதற்காக நேற்று பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. அப்போது கோவாவில் இருந்து காக்கிநாடா செல்வதற்காக 3 மிதவை கப்பலும், மும்பையிலிருந்து சென்னை செல்வதற்காக ஒரு மிதவை கப்பலும், ெகால்கத்தாவிலிருந்து கொச்சின் செல்வதற்காக ஒரு மிதவை கப்பலும் அடுத்தடுத்து துறைமுக அதிகாரிகளின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.
தூக்கு பாலத்தை கடந்து சென்ற இந்த பெரிய மிதவை கப்பல்கள் ஒவ்வொன்றும் சுமார் 225 அடி நீளமும், ஆயிரம் டன் எடையும் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 மிதவை கப்பல்கள் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.