கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மனு அளித்து நிவாரணம் பெறலாம் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய காலத்துக்குள் மனுக்களை அளித்து நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-06 17:13 GMT
தர்மபுரி:
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய காலத்துக்குள் மனுக்களை அளித்து நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நிவாரண தொகை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு நிவாரணதொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1,243 மனுக்கள் பெறப்பட்டு 1,040 மனுக்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 126 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற மே மாதம் 18-ந்தேதிக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
முறையீடு
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இந்த முறையீட்டு மனுவினை தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வுகளை வழங்கும். எனவே கொரோனா தொற்றுநோய் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய காலத்தில் மனுக்களை சமர்ப்பித்து நிவாரணம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்