முதல் அமைச்சர் மீது அவதூறு பேச்சு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது திமுகவினர் போலீசில் புகார்
முதல்-அமைச்சர் மீது அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது தி.மு.க.வினர் தர்மபுரி போலீசில் புகார் செய்தனர்.
தர்மபுரி:
சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு பேசினார். இந்தநிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நவாஸிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
இந்த புகார் மனுவில், தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தமிழக முதல்-அமைச்சர், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டன் மாது, தங்கமணி, நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஏலகிரி நடராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.