ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்:-
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.
இக்கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். குருபகவான் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு முதல்கட்டமாக குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
லட்சார்ச்சனை
அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தெட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 10-ந் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஹரிஹரன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.