தமிழக கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார்
தமிழக கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என்று தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.
தேனி:
தேனி பங்களாமேட்டில் திராவிடர் கழகம் சார்பில், ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற மாநில அரசுக்கு சட்டப்பூர்வமான உரிமை உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்க வேண்டும். திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் தனது அதிகாரத்தை மீறி கவர்னர் திருப்பி அனுப்பினார். உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி 2-வது முறையாக கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் கவர்னர் வேண்டுமென்றே கிடப்பில் போட்டு வைத்துள்ளார். தமிழக கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். வரலாற்றில் முதல் முறையாக தமிழக கவர்னரை திருப்பி அனுப்பக் கோரி நாடாளுமன்றத்தை தமிழக எம்.பி.க்கள் முடக்கினர். அதை பார்த்தாவது கவர்னர் திரும்பி போய் இருக்க வேண்டும். ஆனால் அவர் வேறு திட்டத்தோடு செயல்படுகிறார். அதுபோல் புதிய கல்விக் கொள்கை வடிவில் மனுதர்ம குலக்கல்வி முறையை மீண்டும் அமல்படுத்த முயற்சிக்கின்றனர்.
புதிய கல்விக் கொள்கையில் சமூகநீதி என்ற வார்த்தையே கிடையாது. ‘நீட்’ தேர்வில் விலக்கு பெற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதோடு, பிரதமரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். இதற்கு மேல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால் தோளில் ஏறி அமர்ந்து தான் கொடுக்க வேண்டுமா?. அழுத்தத்தை ஓ.பன்னீர்செல்வமும் கொடுக்கலாமே.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.