விஷம் குடித்த காதல் ஜோடி சிகிச்சை பலனின்றி சாவு
உப்பள்ளியில், வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் மறுத்ததால் விஷம் குடித்த காதல் ஜோடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது
உப்பள்ளி: உப்பள்ளியில், வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் மறுத்ததால் விஷம் குடித்த காதல் ஜோடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு
தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் மல்லப்பா(வயது 28). இவரும், தடஹாலா கிராமத்தை சேர்ந்த முத்தப்பா நரகுந்து என்பவரின் மகள் சாவித்திரி (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதையடுத்து காதல் விவகாரம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளனர்.
மல்லப்பா வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மல்லப்பாவுடனான காதலை கைவிடும்படி சாவித்திரியை கண்டித்துள்ளனர்.
விஷம் குடித்தனர்
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 4-ந்தேதி இரவு காதல் ஜோடி அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு குளிர் பானம் வாங்கி அதில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி காதல் ஜோடியான மல்லப்பா, சாவித்திரி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து நவலகுந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.