‘ஹிஜாப்' விவகாரத்தின் பின்னணியில் இருப்பது யார் என நிரூபணம்-போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா
‘அல்லாகூ அக்பர்' என கோஷமிட்ட முஸ்லிம் மாணவிக்கு அல்கொய்தா இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் ‘ஹிஜாப்' விவகாரத்தின் பின்னணியில் இருப்பது யார் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்
பெங்களூரு: ‘அல்லாகூ அக்பர்' என கோஷமிட்ட முஸ்லிம் மாணவிக்கு அல்கொய்தா இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் ‘ஹிஜாப்' விவகாரத்தின் பின்னணியில் இருப்பது யார் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
அல்கொய்தா பயங்கரவாத இயக்கம்
கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வர அந்த கல்லூரி முதல்வர் தடை விதித்தார். அந்த தடையை மீறி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போட்டிக்கு இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். மண்டியாவில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் சிலர், கல்லூரிக்கு ஹிஜாப்புடன் வந்த பி.காம் 2-ம் ஆண்டு முஸ்லிம் மாணவி முஸ்கான் கானை சுற்றி வளைத்து ஜெய்ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர்.
பதிலுக்கு அந்த மாணவி, ‘அல்லாகூ அக்பர்’ என முழக்கமிட்டார். இதுதொடர்பான வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை முஸ்லிம் தலைவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர். ஒரே வீடியோவால் அந்த மாணவி நாடு முழுவதும் பிரபலமடைந்தார். இந்த விவகாரம் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி, மாணவி முஸ்கான் கானை பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சில அடையாளம் தெரியாத நபர்கள் இருப்பதாக நாங்கள் தொடக்கத்தில் இருந்தே சொன்னோம். கர்நாடக ஐகோர்ட்டும் தனது தீர்ப்பில் சில அடையாளம் தெரியாத நபர்கள் இருப்பதாக கூறியது. இந்த நிலையில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர், மண்டியா மாணவி முஸ்கான் கானை பாராட்டியுள்ளார்.
இதன் மூலம் ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் இருப்பது யார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதுபற்றிய அனைத்து விஷயங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்துவார்கள். உண்மையை போலீசார் கண்டறிவார்கள்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.