பஸ் கண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

பஸ் கண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

Update: 2022-04-06 16:05 GMT
தளி, 
உடுமலை-மூணாறு சாலையில் பஸ் கண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
வனவிலங்குகள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுப்பூனை, குரைக்கும்மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையை அதிகமாக நம்பி உள்ளது. ஆனால் கோடைகாலங்களில் ஏற்படுகின்ற வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது.
அடிவாரத்தில் முகாம்
இதையடுத்து சமவெளிப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கும் வனவிலங்குகள் வனப்பகுதியில் மழைபெய்து நீர்வரத்து ஏற்படும் வரை உடுமலை - மூணாறு சாலை மற்றும் அடிவாரப்பகுதியில் முகாமிட்டு வரும். வனவிலங்குகளுக்கு தமிழக வனப்பகுதியில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளும் கேரளா வனப்பகுதியில் ஆறுகளும் அடைக்கலம் கொடுத்து வருகிறது. 
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதியில் உள்ள புற்கள் மரங்கள் காய்ந்து விட்டதுடன் ஆறுகளிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவை  பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அடிவாரப்பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
பஸ்சை மறித்தது
அந்த வகையில் நேற்று முன்தினம் மறையூர் அருகே பெரியவாறை பகுதியில் தண்ணீர் தேடிக்கொண்டு வந்த ஒற்றை யானை உடுமலை-மூணாறு சாலை வழியாக வந்த கேரள அரசு பஸ்சை வழிமறித்தது. அத்துடன் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை வழிமறித்த யானை ஒருவழியாக அங்கிருந்து சென்றது.
அதைத்தொடர்ந்து பஸ் புறப்பட்டு உடுமலைக்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது, பெரியவாறை, கன்னிமலை, நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் இந்த யானை உலா வந்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள் யாரையும் எந்தவிதமான தொந்தரவும் செய்வதில்லை. எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வருகின்ற பொதுமக்கள் அளிக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிடும். கோடைகாலம் என்பதால் தாகம் தணிப்பதற்கு செல்லும் போது வாகனங்கள் இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கும்.இதனால் ஆத்திரமடைந்து வழிமறித்து இருக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.
யானைகள் நடமாட்டம்
 வனத்துறையினர் கூறியதாவது:-
உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடந்து செல்லும் வரையில் அமைதி காத்து பின்பு வாகனங்களை இயக்க வேண்டும். யானைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதத்தில் ஒலி எழுப்புவதோ அதன்மீது லைட் அடிப்பதோ கற்களை வீசுவதோ கூடாது. 
இதனால் அவை விரக்தியடைந்து வாகன ஓட்டிகளை தாக்குவதற்கான சூழல் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கோடைகாலம் முடியும் வரையில் உடுமலை-மூணாறு சாலையில் வாகனங்களை கவனமாக  ஓட்டி செல்ல  வேண்டும். 
இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்