ஆழியாறு நவமலை பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை கேரளா சென்றது
ஆழியாறு நவமலை பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை கேரளா சென்றது. இதற்கிடையில் யானை செல்வதற்கு வசதியாக சூரிய மின் வேலியை அகற்றிய விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
ஆழியாறு நவமலை பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை கேரளா சென்றது. இதற்கிடையில் யானை செல்வதற்கு வசதியாக சூரிய மின் வேலியை அகற்றிய விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்த யானை
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட்ட பகுதியில் மழை இல்லாததால் வனப்பகுதி பசுமை இழந்து உள்ளது. மேலும் நீரோடைகளும் வறண்டு விட்டன. இந்த நிலையில் ஆழியாறு அணைக்கு தாகம் தீர்க்க வந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் வால்பாறை ரோடு, நவமலை பகுதியில் சுற்றி திரிந்து வந்தது.
மேலும் யானை நவமலைக்கு சென்ற கார்களையும், அரசு பஸ்சின் ஜன்னல் கண்ணாடியையும் சேதப்படுத்தியது. அந்த வழியாக வந்த அரசு பஸ், மின்வாரிய அதிகாரிகள் வாகனங்களை யானை துரத்தியது. இதையடுத்து வனத்துறையினர் நவமலை செல்லும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்தனர்.
மேலும் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது யானை ஆழியாறில் இருந்து இடம்பெயர்ந்து கேரள மாநிலம் நெல்லியாம்பதி பகுதிக்கு சென்றது. இதனால் வனத்துறையினர், மலைவாழ் மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு நன்றி
கடந்த 6 மாதத்திற்கு முன் இடம்பெயர்ந்து ஆழியாறுக்கு காட்டு யானை வந்தது. அப்போது பட்டா நிலங்களில் சூரிய வேலி இல்லை. இதற்கிடையில் சில விவசாயிகள் தொங்கும் சூரிய மின் வேலி அமைத்தனர். இதனால் யானை மீண்டும் வந்த வழியில் திரும்பி செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் கணேசன் ஆகியோரது முயற்சியால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து விவசாயிகள் தொங்கும் சூரியவேலியை தற்காலிகமாக அகற்றி, யானை செல்வதற்கு பாதை திறந்து விட்டனர். இதை தொடர்ந்து யானை ஆழியாறு பகுதியில் இருந்து கேரள மாநில வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
தற்போது ஆண் யானைகள் பற்றி விவசாயிகள் அதிகம் புரிந்து கொண்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே யானை திரும்பி செல்வதற்கு ஆதரவு அளித்த விவசாயிகள் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கிடையில் நவமலை செல்லும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.