வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை

மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-06 15:46 GMT
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானை இறந்து கிடந்தது

கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. தற்போது கோடைகால தொடங்கி, வெயில் சுட்டெரித்து வருவதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனைத்தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கீழ் பில்லூர் அணைப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.

வனத்துறையினர் விசாரணை

இதுகுறித்து வனத்துறையினர் வனச்சரக அலுவலர் பழனிராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனச்சரக அலுவலர் மாவட்ட வன அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஆகும். யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்