காட்டு யானை தாக்கி டிரைவர் பலி
சிறுமுகை அருகே காட்டு யானை தாக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம்
சிறுமுகை அருகே காட்டு யானை தாக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொக்லைன் டிரைவர்
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பெத்திக்குட்டை பிரிவு பவானி சாகர் அணைப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அதிகாரி செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், ராயப்பன் மற்றும் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தவர் ஆலாங்கொம்பு விஸ்கோஸ் காலனியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் நவீன்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது.
காட்டு யானை தாக்கி பலி
தொடர்ந்து நடத்திய விசாரணையில், நவீன்குமார், பவானி சாகர் அணையின் பின்பகுதிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் நவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.