‘தினத்தந்தி’ புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வால்வு மூடி உடைப்பு
பாளையங்கோட்டை தியாகராஜநகர் ஈ.பி. காலனி மெயின் ரோட்டில் குடிநீர் வால்வு மூடி உடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த குழியில் தினமும் விபத்து நேரிடுகிறது. எனவே, அதனை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அருண் விக்னேஷ், பாளையங்கோட்டை.
மின்கம்பம் அமைக்கப்படுமா?
பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டி பஞ்சாயத்தில் ஆலங்குளம் என்னும் ஊருக்கு செல்லும் சாலையில் இ்ட்டேரியில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தூரம் மின்விளக்குகள் எதுவும் இல்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அங்கு மின்கம்பம் அமைத்து மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கலா, ஆலங்குளம்.
கழிவுநீர் கலந்த குடிநீர்
நாங்குநேரி தாலுகா சிந்தாமணி பஞ்சாயத்து மேல சிந்தாமணியில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. அங்கிருந்து கீழ சிந்தாமணிக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரானது, கழிவுநீர் கலந்த துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அமலதாஸ், சிந்தாமணி.
தெருவிளக்கு பொருத்தப்படுமா?
பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு கிருபாநகரில் மின்கம்பங்கள் உள்ளது. ஆனால், அதில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, அங்கு மின்விளக்குகளை பொருத்தி எரியச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இசக்கியம்மாள், கிருபாநகர்.
பழுதடைந்த சாலை
மானூர் யூனியன் வன்னிக்கோனேந்தல் அருகே சுண்டங்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை பழுதடைந்து மோசமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், மருத்துவமனை மற்றும் அவசர தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சரவணன், சுண்டங்குறிச்சி.
வீணாகும் குடிநீர்
விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள காந்திபுரம் தெருவில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. குழாய் மூலமாக இந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் அந்த தொட்டி அமைத்து பல நாட்கள் ஆகிவிட்டதால், தற்போது அந்த தொட்டியின் பக்கவாட்டில் கீறல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஏற்றப்படும் வேளையில், குடிநீர் பீறிட்டு வீணாக வெளியேறுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
லுகேஷ் போஸ், விக்கிரமசிங்கபுரம்.
பஸ் மீண்டும் வருமா?
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, பாவூர்சத்திரம், ஆவுடையானூர், கடையம் வழியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வரை கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு ஒரு நாளைக்கு 4 முறை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த பஸ் வருவதில்லை. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இசக்கித்துரை, மேலப்பாவூர்.
அடிப்படை வசதி
ஆலங்குளம் அருகே நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் நெட்டூர் சாலையில் தினசரி மார்க்கெட் உள்ளது. மார்க்கெட்டுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், அங்கு முறையான வாறுகால் வசதியும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு ஆலங்குளம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெட்டும் பெருமாள், ஆலங்குளம்.
சிதிலமடைந்த அங்கன்வாடி மையம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி தெரு 15-வது வார்டு பகுதியில் அங்கன்வாடி மையம் கடந்த 5 ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதியில், 200-க்கு மேல் மழலையர்கள் உள்ளனர். பள்ளி படிப்பின் அடித்தளமாக விளங்கும் அங்கன்வாடி மையத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பேராத்து செல்வம், சாத்தான்குளம்.
சாலை சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் தெருவில் சீரடி சாய் பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், சாலை முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காமாட்சி, தூத்துக்குடி.