திண்டுக்கல்லில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்; ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல்லில், குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-04-06 15:07 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஒன்றியக்குழு கூட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஷோபியாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், மலரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள், அதற்காக ஒதுக்கப்படும் நிதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
செல்வநாயகம் (மா.கம்யூனிஸ்டு):- குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்காக திண்டுக்கல்லில் தற்போது குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும். ஏற்கனவே இந்த திட்டத்தில் பலன் அடைந்தவர்கள் மீண்டும் பயன் அடைந்துவிடக்கூடாது என்றார். இதேகோரிக்கையை வலியுறுத்தி மற்ற கவுன்சிலர்களும் பேசி ஆதரவு தெரிவித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன்:- கணக்கெடுப்பை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும்.
பற்றாக்குறை
செல்வநாயகம்:- காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வேண்டி ஏராளமானோர் பணம் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். ஆனால் தற்போது வரை இணைப்பு வழங்கப்படவில்லை. முருகபவனம் குப்பைகிடங்கில் எப்போதும் தீப்பற்றி எரிகிறது. அதனை தடுக்க வேண்டும். குளங்களை தூர்வார நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும்.
ஒன்றியக்குழு தலைவர்:- காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக குடிநீர் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் இணைப்பு வழங்க உரிய பரிந்துரை செய்யப்படும். குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நியமன குழு
ஜீவாநந்தினி (மா.கம்யூனிஸ்டு):- அங்கன்வாடி மைய பணியாளர்களை நியமிப்பதற்கு முன்பு கவுன்சிலர்கள் அடங்கிய நியமன குழுவை உருவாக்க வேண்டும். அந்த குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி மைய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன்:- கோரிக்கை குறித்து உரிய பரிசீலனை செய்யப்படும்.
ஜீவாநந்தினி:- ஒன்றியக்குழு கூட்டங்கள் நடக்கும் போது கையிருப்பு நிதி எவ்வளவு, செலவினங்கள் எவை போன்ற விவரங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவித்து உரிய கணக்கு காட்ட வேண்டும்.
ஒன்றியக்குழு தலைவர்:- கணக்கு விவரங்களை தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்