சிறந்த போலீஸ் நிலையமாக கூடலூர் தேர்வு
சுகாதாரம் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பில் சிறந்த போலீஸ் நிலையமாக கூடலூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டு தெரிவித்தார்.
கூடலூர்
சுகாதாரம் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பில் சிறந்த போலீஸ் நிலையமாக கூடலூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டு தெரிவித்தார்.
டி.ஐ.ஜி. ஆய்வு
கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். தொடர்ந்து வழக்குகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் வளாகத்துக்குள் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் போக்சோ வழக்குகளை திறம்பட கையாண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா, சரோஜா, ராணி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க தொகையை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குமார், ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம்
முன்னதாக டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் குற்ற வழக்கு பதிவேடுகள் பராமரிப்பதில் கூடலூர் போலீஸ் நிலையம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவை மண்டலத்துக்கு உட்பட்ட நீலகிரியில் போக்சோ வழக்குகள் குறைவு. ஈரோட்டில் அதிகம்.
தமிழக எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் வந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லாதது தெரியவந்தது. மாநில எல்லைகளில் அனைத்துத்துறைகளை ஒருங்கிணைத்த சோதனைச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. வாளையாரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பந்தலூர் தாலுகா பகுதியில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.