மருத்துவமனைகளை தூய்மைப்படுத்த புதிய திட்டம் தொடக்கம்
மருத்துவமனைகளை தூய்மைப்படுத்த புதிய திட்டம் தொடக்கம்
ஊட்டி,ஏப்.7-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி மருத்துவமனையில் ஏற்படும் தொற்று நோயை தடுக்கவும், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும்போது மனநிம்மதியுடன் இருக்கவும், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களின் தோற்றத்தை அழகுபடுத்தவும் மாவட்டம் முழுவதும் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 அரசு மருத்துவமனைகள், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி கட்டிடங்கள், வெளிப்புற பகுதிகள் உள்பட முழு மருத்துவமனை வளாகத்தையும் தூய்மையாக பராமரிப்பதோடு, கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகிறது. பூச்சி மற்றும் கரையான்களை அப்புறப்படுத்தி, அனைத்து குப்பை மற்றும் சேதமடைந்த பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வருகிற 30-ந் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. தூய்மை நடவடிக்கைகள் குறித்து செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.